எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக ‘தகவல் தொழில்நுட்ப வெளியும்’ ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், டீப்-டெக், மின்சார வாகனங்கள், குவாண்டம் கம்யூட்டிங், காலநிலை மாற்றம், விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து 100-க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். இந்திய தொழில் கூட்டமைப்பு, ஐசிடி அகாடமி, இன்ஃபோசிஸ், விப்ரோ, விஐடி சென்னை, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல், க்வால்காம், எல் அண்ட் டி போன்ற முன்னணி நிறுவனங்கள், 10 ஆயிரம் பார்வையாளர்கள், 4000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நவீன வகை தொழில்நுட்பங்களுடன் 100 அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, இந்த மாநாடு தமிழகத்தின் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்துக்கு வழிவகுப்பதுடன், உலகளாவிய அளவில் தொழில்துறை சார்ந்த கல்வியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம்தான் இன்றைக்கு அதிகளவில் பேசப்படும் அடுத்தகட்ட தொழில்நுட்பம். இதனால் வேலைவாய்ப்புகள் குறையாது, மேலும் பெருகத்தான் செய்யும். அந்தவகையில் ஏஐ, இணைய கருவிகள், மின்வாகன உற்பத்தி என வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஐசிடி அகாடமி மூலம் கடந்த ஓராண்டில் 10,435 ஆசிரியர்கள் மற்றும் 34,227 மாணவர்களுக்கு தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐடியில் எந்தெந்த துறைகளில் மேம்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை கவனித்து அந்த துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு தொழில் பிரிவுகளோடு ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2021-ல் 14,927 ஆக இருந்த இ-சேவை மையங்கள், 2024-ல் 33,554 ஆக இருமடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி நகரங்களில் மட்டும் குவியக்கூடாது என்பதற்காக சென்னை, கோவை மட்டுமின்றி சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி என இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் கூட எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறு தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவியிருக்கிறோம். மேலும், கோவையில் ஏஐ தொழில்நுட்பத்துக்காக 2 மில்லியன் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’யையும் நிறுவவுள்ளோம். புத்தொழில் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வழிகாட்டும் வகையில் புதிய தொழில்நுட்ப கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். டிஜிட்டல் யுகத்தில் மக்களுடைய அனைத்து பயன்பாடுகளுமே டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். இதனால் அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) சைபர் பாதுகாப்புக்காக தொழில்நுட்ப உதவிப் பிரிவும் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்துறை செயலர் குமார்ஜெயந்த், தமிழ்நாடு மின்னாளுமை முகமை தலைமை நிர்வாக அலுவலர் எம்.கோவிந்தராவ், எல்காட் மேலாண்மை இயக்குநர் பி.ரமண சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.வைத்திநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் நந்தினி, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் அரவிந்த்குமார், ஹெச்சிஎல் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story