நலிந்து வரும் மண்பாண்ட தொழில்

நலிந்து வரும் மண்பாண்ட தொழில்
தமிழக அரசு சலுகைகளை வழங்க கோரிக்கை
பண்டைய தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்த தொழில் குயத் தொழிலாகும். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் குயவர், வேளார், உடையார், செட்டியார் என அழைக்கப்பட்டனர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வேலூருக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரிகிரி என்ற மண்ணில் மண்பாண்டங்களை செய்து மண்பாண்ட தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்கள் ஆற்காடு நவாப்களின் உணவு பாதுகாப்பிற்காக மண் பாண்டங்களை செய்து தந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மேலைநாட்டு கலாச்சாரங்கள் மீதான பற்று காரணமாக, சில ஆண்டுகளாக மண் பாண்டங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால் பொங்கலுக்கு மட்டும் அதன் மதிப்பு குறைவதில்லை. இந்நிலையில், நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில், பொங்கல் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி தற்போது மிகவும் மந்தமாகவே உள்ளது. பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானை அடுப்பு, சட்டி உள்ளிட்டவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து தயாராக வைத்திருப்பார்கள். ஆனால், அண்மையில் தொடர்ந்து பெய்த தொடர் மழை காரணமாக, பொங்கல் பானை, அடுப்பு செய்யும் பணி கால தாமதமாகவே தொடங்கி உள்ளது. இருப்பினும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திருமருகல் ஒன்றியத்தில், திட்டச்சேரி, ப.கொந்தகை, கணபதிபுரம், திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 - க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் செய்யும் பணியை செய்து வந்தனர். இத்தொழிலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு தொழில் ரீதியாக எந்த வித சலுகைகளும், மானியங்களும் செய்ய முன்வராததால், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக பொங்கல் பானை, அடுப்பு, அகல்விளக்கு செய்யும்போது, பருவமழை பெய்ததால் கடந்த சில ஆண்டுகளாக மண் பாண்ட தொழில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வந்தனர். மண் பானையில் உணவு சமைத்தால் புற ஊதாக் கதிர்கள் உணவை தாக்காமல் இருப்பதாகவும், அதன் காரணமாக உணவு சத்துள்ளதாகவும், சுவையுள்ளதாகவும் இருக்கும் என்பது வாழ்வியல் உண்மை. நகரத்தில் வாழும் பலர் இன்றும் மீன் குழம்பு வைக்க மண் சட்டியை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். மண்சட்டி, மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், தைத் திருநாளான முதல் நாள் புது பானை, புது அடுப்பு பயன்படுத்தி பொங்கல் செய்வது காலங்காலமாய் தமிழர்களிடையே இருந்து வரும் பழக்கம். இதனால் இத்தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம் என தொழிலாளர்கள் கூறி உள்ளனர். இந்நிலையில், சிதைந்து வரும் மண் பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்து எங்களது வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story