காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த கர்நாடகா துணை முதலமைச்சர்
Kanchipuram King 24x7 |11 Jan 2025 1:18 PM GMT
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்காகவும் போராடுகிறோம்' கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார்
கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கும்பகோணத்தில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்த பின், ஹெலிகாப்டர் வாயிலாக, காஞ்சிபுரம் அருகே உள்ள பச்சையப்பன் கல்லுாரி வளாகத்திற்கு, மனைவியுடன் வந்தார். அவருக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் காங்., கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நடந்த கோ பூஜை மற்றும் சுதர்ஷன ஹோமத்தில் பங்கேற்றார். பின், துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது : தேர்தலுக்கு முன்பாகவே 2023ல், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளேன். இப்போது, சுதர்ஷன ஹோமத்தில் பங்கேற்க வந்தேன். திருப்பதியில் பக்தர்கள் இறப்பு குறித்து எந்தவித கருத்தும் கூற விரும்பவில்லை. கர்நாடக மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில், தமிழகத்திற்கு உதவியாக போராடி வருகிறோம். அரசியல் கட்சிகளும் அதை அறிவர். எனவே, நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும். ஏற்கனவே 460 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அதை சேமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று சரணடைந்த ஆறு நக்சலைட்டுகள் விவகாரத்தில், மூன்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இனி வரும் காலங்களில், கர்நாடகா நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும். ஒரே நாடு; ஒரே தேர்தலை பொறுத்தவரையில் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் மேலிட தலைமை எடுக்கும் முடிவின்படி நடந்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story