அதிமுக, திமுக பேனர் யுத்தத்தால் திருச்சியில் பரபரப்பு
Tiruchirappalli King 24x7 |11 Jan 2025 6:22 PM GMT
யார் அந்த சார்?- இவர்தான் அந்த சார்?- அதிமுக, திமுக பேனர் யுத்தத்தால் திருச்சியில் பரபரப்பு…!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாரிடமோ சார்…சார்…என்று பேசும் தகவல் பேசும் பொருளாக உள்ளது. இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட அதிமுகவினர் யார் அந்த சார்…என்று கேட்டு தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுக்கும் வகையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கையில் எடுத்துள்ளனர். அதிமுகவினர் கேட்ட கேள்விக்கு இவர்தான் அந்த சார்…என சிலரது புகைப்படங்களை வெளியிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதேபோல, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் அதிமுக சார்பில் யார் அந்த சார்? எனக்கேட்டு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதைபார்த்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் இவர் தான் அந்த சார்… என்று சிலரது புகைப்படங்களை சேர்த்து பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனால், இரு கட்சிகளிடையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிமுகவினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினர் சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
Next Story