அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மர்மம் இருக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு
Chennai King 24x7 |12 Jan 2025 9:34 AM GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் யாரோ ஒரு முக்கிய பிரமுகர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது, சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் வாசித்த ஆளுநரின் உரைக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அந்த உரை மீது நான் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பேசும்போது, “2021 தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 20 சதவீதமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. அதில் நீட் தேர்வு ரத்தும் ஒன்று” என தெரிவித்தேன். இதற்கு பதில் அளித்த முதல்வர், “நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மத்திய அரசு நினைத்தால் தான் ரத்து செய்ய முடியும்” என்றார். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். அரசின் வருவாயை அதிகரித்து மகளிர் உரிமை தொகை கொடுத்தால் பரவாயில்லை. கடன் வாங்கி அந்த தொகையை கொடுக்கின்றனர். அந்த கடனை எப்போது திரும்பி செலுத்த முடியும் என்பதற்கு பதில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தது முதல், 2024-ம் ஆண்டு வரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 804 கோடி வருவாய் உயர்ந்துள்ளது. இந்த பணமெல்லாம் எங்கே சென்றது, ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 394 கோடி கடன் வாங்கி உள்ளனர். இவ்வாறு திமுக ஆட்சியில் ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 288 கோடியை கொண்டு பெரிய திட்டம் எதுவும் செயல்படுத்தவில்லை. இந்திய அளவில் கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வரும்போது உண்மை தெரியும். அதிமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு தான் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு வேகமெடுத்தது. அதிமுக இல்லை என்றால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கும். அண்ணா நகர் பாலியல் வழக்கில் யார் குற்றம் செய்திருந்தாலும் அதிமுக அரசாக இருந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுத்திருக்கும். திமுக அரசுபோல குற்ற வாளிகளை காப்பாற்ற மாட்டோம். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் யாரோ ஒரு முக்கிய பிரமுகர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. யார் அந்த சார், என்பதை தான் நாங்கள் கேட்கிறோம். இதற்கு ஏன் இவர்களுக்கு கோபம் வருகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம் என பழனிசாமி கூறினார்.
Next Story