வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்வில் ஒரு மைல்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல். திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி, இந்த ‘வேர்களைத் தேடி’ திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும்போது, “நான் முதலமைச்சரானதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெய்ன், அமெரிக்கா என்று உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும், அமெரிக்கப் பயணத்தில் எனக்கு அளித்த வரவேற்பை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, அயலகத் தமிழர் நாள் நல்வாழ்த்துகளையும் உலகத் தமிழருக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய்மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால்தான், பாலைகள் சோலைகள் ஆனது. கட்டாந்தரைகள் தார்ச்சாலைகள் ஆனது. அலைகடல்களில் துறைமுகங்கள் உருவானது. தேயிலைத் தோட்டங்கள் - ரப்பர் தோட்டங்கள் - கரும்புப் பயிர்கள் செழித்து வளர்ந்தன; அந்த நாடுகளும் வளம் பெற்றது. நான் இதைச் சொல்லும்போது, நீங்கள் கடந்து வந்த பாதை, பட்ட துன்பங்கள் அடைந்த உயரங்கள் என்று உங்களின் நினைவுகள் நிச்சயம் உங்கள் குடும்ப வரலாற்றை எண்ணிப் பார்க்கும். அப்படிப்பட்ட தமிழ்த்தியாகிகளின் வாரிசுகளான உங்களை உறவாக அரவணைத்துக்கொள்ள தமிழ்நாடு இருக்கிறது. நான் இருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்கவில்லை. இதுதான் தமிழினத்தின் பாசம். அதனால்தான், அயலக மண்ணில் குடியேறினாலும், உங்கள் முன்னோர்களும் - நீங்களும் தமிழை வளர்க்கிறீர்கள். இப்படி அயலக மண்ணிலும் தமிழுக்காகப் பாடுபட்ட சான்றோர்களின் வழித்தோன்றல்கள் மற்றும் அண்மைக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தமிழ்ச்சொந்தங்களுக்கு நன்றி. சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு அயலகத் தமிழர் நாளைக் கொண்டாடுகிறோம். நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஏதோ ஒன்று கூடினோம். பழம்பெருமைகளைப் பேசினோம் என்று நாம் கலைந்து போகவில்லை. கடந்த காலங்களில் தீட்டிய திட்டங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து நிகழ்கால வளர்ச்சிப் போக்கை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் அயலகத் தமிழர்கள் மேலும் சிறப்பாக வாழ்வதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகிறோம். அதற்காகத்தான் ஒரு குடையின்கீழ் இயங்குகிறோம். அயலகங்களில் குடிமக்களாக வாழும் தமிழர்களும், அயலகங்களுக்குச் சென்று உழைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் வளமாக வாழத்தான் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஓய்வில்லாமல் உழைக்கிறது. நிலமெங்கும் நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்காகவும் செயல்பட்டு, உங்களின் இதயங்களை ஆளும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு விளங்குகிறது. எந்த தூரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அயலகங்களில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பரப்புரைக் கழகம், தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம், இலவச சட்ட மையங்கள், அயலக தமிழர்களின் குழந்தைகள் நமது தாய்மொழியை கற்க, தமிழ் இணையக் கல்விக் கழகம் வழியாக, தமிழ்ச் சங்கங்களோடு இணைந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறோம். இதில் தன்னார்வலர்களாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்குகிறோம். புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு விருது, தங்களின் நாட்டில், சமூகநலனுக்கும், தாயக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தமிழர்களுக்கு விருதுகள், போர் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தாயகத்துக்கு அழைத்துவரும் சிறப்பு விமானங்களுக்கு உதவி, அயலகங்களில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்கிறோம். இது மூலமாக, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இப்போதும், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் ஆளுமைத்திறனை எடுத்துக்காட்டும் வகையில், சிறப்பு அமர்வுகள் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்து, உலக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கும் நம் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து, ’உலகம் யாவும் ஒன்றே’-என்று முழங்கும் தமிழன் கணியன் பூங்குன்றனார் பெயரில் விருது. இப்போது, இந்த மேடையில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனைத் தமிழர்களுக்கு நான் விருதுகளை வழங்கியிருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, அயலகத் தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, “தமிழ்மாமணி” விருதும் பட்டயமும் வழங்கியிருக்கிறோம். அயல்நாட்டுத் தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுப்பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, “சிறந்த பண்பாட்டுத் தூதுவர்” என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம். இந்த விருதுகளை எல்லாம், இந்தாண்டு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற விருதுகள் மூலம், பண்பாட்டுத் தூதுவர்களை உருவாக்கி, உலகெங்கும் உள்ள தமிழ்ச் சொந்தங்களோடு உறவுப் பாலம் அமைப்போம். இது எல்லாவற்றையும்விட, என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டம் இருக்கிறது. அதுதான், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களின் வேர்கள் பரவியிருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டும் “வேர்களைத் தேடி” திட்டம். தமிழ் மண்ணில் அவர்களின் சொந்தங்களை கண்டுபிடித்து, கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை உருவாக்கிய திட்டம்தான் இது. இன்னும் சொல்லவேண்டும் என்றால், என் அரசியல் வாழ்க்கையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல். திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி, இந்த ‘வேர்களைத் தேடி’ திட்டம். இந்தத் திட்டத்தில், இதுவரை இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, 157 இளைஞர்கள் தாய் மண்ணுக்கு வந்திருக்கிறார்கள். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதி நாளான இன்றைக்கு நம்முடைய இந்த அரங்கில் இருக்கிறார்கள். இந்தப் பயணமும் உறவும் என்றென்றும் தொடரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அடுத்து, அயலகங்களில் பணிபுரியும் தமிழர் நலன்களுக்காக, அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செய்திருக்கும் சிலவற்றையும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். வெளிநாடுகளில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஊதியச் சிக்கல்களைத் தீர்த்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, அயலகத் தமிழர்களை இந்தத் துறை பாதுகாத்து வருகிறது. உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும், மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும், குவைத் தீ விபத்தாக இருந்தாலும், இன்னலுக்குள்ளாகும் தமிழர்களைத் தேடிச் சென்று உதவும், ஆதரவுக்கரம் நீட்டும் துறை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை. அத்துறையின்கீழ் செயல்படும் 'அயலகத் தமிழர் நலவாரியம்'. இந்த வாரியத்தில் இதுவரைக்கும், 26 ஆயிரத்து எழுநூறுக்கும் அதிகமானோர் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்தவர்களுக்கு காப்பீட்டுத் திட்டம், அவர்களின் குடும்பத்தினருக்கு திருமண உதவித்திட்டம், கல்வி உதவித்தொகைத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் என்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அயல்நாடுகளில் மட்டுமல்ல; வெளி மாநிலங்களில் தமிழர்கள் தவித்தாலும், இந்த அரசு விரைந்து செயலாற்றி, தேவையான உதவிகளை செய்து வருகிறது. இப்படி கடந்த 07-05-2021 முதல் 28-11-2024 வரை அயல்நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இரண்டாயிரத்து 414 தமிழர்களைத் தாயுள்ளத்தோடு பாதுகாப்பாக, தாய்மண்ணுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அயல்நாடுகளில் உயிரிழந்த 864 தமிழர்களின் உடல்களைச் சொந்த மண்ணுக்குக் கொண்டு வந்து, தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மூலம், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இருக்கிறோம். இப்படி, அல்லல்படும் அனைவரது கண்ணீரையும் துடைக்கிறோம். இன்னலுக்கு உள்ளானவர்களின் புன்னகையை மீட்டுத் தருகிறோம்! இதுதான், பேரறிஞர் அண்ணா எடுத்துச் சொன்ன, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவம். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். என்னுடைய Style ‘சொல் அல்ல செயல்’. அப்படித்தான், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைகளை நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்திருக்கிறோம். நம்முடைய தமிழர்களின் வெற்றிக்காக செயலாற்றிட தொண்டாற்றிட முன்னேற்றிட உலகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கக் கூடிய உங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க, உங்களில் ஒருவனாக உற்ற சகோதரனாக – மூத்த தோழனாக கேட்டுக்கொள்கிறேன். முன்னேற்றிட உலகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கக் கூடிய உங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க, உங்களில் ஒருவனாக உற்ற சகோதரனாக – மூத்த தோழனாக கேட்டுக்கொள்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை. நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள். மொழியை மறக்காதீர்கள். இந்த மண்ணையும் மக்களையும் மறக்காதீர்கள். உங்கள் உறவுகளை மறக்காதீர்கள். தாய்த்தமிழ் உறவுகளாக உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழா. நீங்கள் எங்கு இருந்தாலும், தமிழ்நாட்டில் உங்கள் சகோதரன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு வாழுங்கள். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வாழ்த்துகளை தெரிவித்து, வாழ்வதும்; வளர்வதும் - தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும் என அவர் பேசினார்.
Next Story