போதை கலாச்சாரம் - பெண்கள் மீதான வன்கொடுமை

எதிராக மினி மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், உலகத்தில் நிலவும் போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும், மாணவிகள், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மினி மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன மாரிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். செருதூர் பாலத்தடியில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சளைக்காமல் உற்சாகத்துடன் ஓடி வந்தனர். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களை, பொதுமக்கள் உற்சாகப்படுத்தும் விதமாக கைத்தட்டி வரவேற்று ஊக்கப்படுத்தினர். வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும், கீழையூர் வட்டார ஆத்வா குழு தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.ப.ஞானசேகரன், திமுக நிர்வாகி என்.ரஹமத்துல்லா, முன்னாள் திருப்பூண்டி மேற்கு ஊராட்சி தலைவர் ராதிகா சத்யராஜ், துணைத் தலைவர் முகமது ரபீக் ஆகியோர் போட்டியில், முதலிடம் பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூ.4 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், கீழையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கே.கார்த்திகேயன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எஸ்.அன்புராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.அருள்தாஸ், மாவட்டத் தலைவர் என்.பி.நன்மாறன், மாவட்ட பொருளாளர் என்.எம்.பாலு, ஒன்றிய செயலாளர் என்.பி.கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஏ.உமாநாத் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story