பாலாற்று பாசன கால்வாய் மாயம் தூர்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
Kanchipuram King 24x7 |13 Jan 2025 11:23 AM GMT
அங்கம்பாக்கம் கிராமத்தில் பாலா டு பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. ஏரி பாசன வசதி இல்லாத இக்கிராமத்தில், பாலாற்று பாசனம் வாயிலாக நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, அங்கம்பாக்கம் கிராம விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையிலான பாசன கால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் துார்ந்து மாயமாகி வருகிறது. இதையடுத்து, கால்வாயின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்புக்கப்பட்டு உள்ளது. தற்போது, பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட கால்வாயாக உள்ளது. இதனால், இப்பகுதியில் ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணற்று பாசனம் வாயிலாக, பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், சிறு விவசாயிகள் போதுமான பாசன வசதி இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, பாலாற்று பாசன கால்வாய் வசதி மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story