வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா
Thanjavur King 24x7 |13 Jan 2025 4:26 PM GMT
சுற்றுலா பயணிகள்
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினர். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மத்திய சுற்றுலா அமைச்சக தென் மண்டலம், தமிழக அரசு சுற்றுலா ஆகியவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்பகுதியிலுள்ள வாழைத் தோப்பில் ஜல்லிக்கட்டு காளைகள், நடன குதிரை, சண்டை ஆடுகள், சண்டை சேவல்கள், பந்தய குதிரை வண்டி, பந்தய மாட்டு வண்டி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதில், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 75 பேர் மாட்டு வண்டியில் அமர வைக்கப்பட்டு, மேள, தாளத்துடன் கிராமத்திலுள்ள தெருக்கள் சுற்றிக் காண்பிக்கப்பட்டது. அப்போது, தெருக்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முனியாண்டவர் கோயில் திடலுக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர், பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பாட்டம், உரி அடித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மண் பானை செய்தல், பூ கட்டுதல், கயிறு திரித்தல், வளையல் அணிவித்தல் போன்றவற்றையும் பார்த்து மகிழ்ந்தனர். இதையடுத்து, பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், மல்லர் கம்பம், தேவியர் ஆட்டம், கருப்பசாமி ஆட்டம் போன்ற கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவற்றை வெளிநாட்டுச் சுற்றலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம், மாவட்டச் சுற்றுலா அலுவலர் அ. சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story