மாணவிகளிடம் சில்மிஷம்:அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
Salem King 24x7 |14 Jan 2025 2:22 AM GMT
முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
சேலம் அருகே உள்ள சின்ன சீரகாபாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 59) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்த பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். இந்தநிலையில் சுப்பிரமணியன் பள்ளியில் படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். பின்னர் அவர்கள் இது பற்றி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடமும், சைல்டு லைன் அமைப்பினரிடமும் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் சில மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதனிடையே தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story