குறையும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

X
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 17 கிராமங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு 7 ஆக குறைந்தது. அரசின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரியமாக உலகம்பட்டி, கொசவபட்டி, மறவபட்டி, புகையிலைப்பட்டி, நல்லம நாயக்கன்பட்டி, தவசிமடை, நத்த மாடிப்பட்டி, என்.அய்யாபட்டி, சொறிபாறைப்பட்டி, கே.ஆவாரம்பட்டி, ஏ.வெள்ளோடு, பி.கலையம்புத்தூர், அய்யம்பாளையம், பில்லம நாயக்கன்பட்டி, உலுப்பகுடி, ஆண்டிபட்டி, என்.கோவில்பட்டி ஆகிய 17 கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. புதிதாக ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமத்தினர் அனுமதி கேட்டபோதும் அதை மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இந்நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் 7 கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு அதைவிட குறைவான கிராமங்களிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற நிலை உருவாகியுள்ளது.
Next Story

