கடும் போக்குவரத்து நெரிசல்!

X
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, பொங்கல் திருவிழா மட்டுமன்றி, தொடா் விடுமுறையின் காரணமாக பக்தா்களின் வருகை கடந்த 2 நாள்களாக அதிகரித்து வருகிறது. பாதயாத்திரை பக்தா்களோடு, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்களும் பழனிக்கு வருவதால், திண்டுக்கல்- பழனி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் அடுத்த மூலசத்திரம் பகுதியில் 4 வழிச்சாலைக்கான மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சாதாரண நாள்களில் கூட வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டன்சத்திரம்- பழனி புறவழிச்சாலை முதல் மூலசத்திரம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தா்களின் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள், லாரிகள், காா்கள் மட்டுமன்றி இரு சக்கர வாகனங்கள் கூட இந்த 5 கி.மீ. தொலைவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக காத்து நின்றன. முந்திச் செல்ல முயன்று 5 முதல் 7 வரிசைகளில், சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீஸாா் இல்லை. ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

