இடைத்தேர்தலில் இருமுனை போட்டி

இடைத்தேர்தலில் இருமுனை போட்டி
X
அ.தி.மு.க- பா.ஜ.க புறக்கணிப்பால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருமுனை போட்டி ஏற்படும் சூழல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே எஸ் இளங்கோவன் கடந்த மாதம் 14-ம் தேதி உடல்நலகுறைவு காரணமாக இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை அடுத்து அதிமுக சார்பில் இடைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து விட்டனர். பா.ஜ.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க- நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. முக்கியமான எதிர்கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் தேர்தல் களம் பரபரப்பு இல்லாமல் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருமகன் ஈவேரா மறைவையொட்டி நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரசும், அதிமுகவும் நேரடியாக களத்தில் நின்றன. இவர்களுடன் நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என கடந்த 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 79 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் தேர்தல் களம் அனல் பறந்தது. ஆனால் இந்த முறை இடைத்தேர்தலில் அது போன்ற பரபரப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story