தேர்தல் ஆணையம் அறிவிப்பு

X
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடிகளில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது) தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்ற போது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சுப் பிழைகள், எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாக பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளர் உடைய பெயர் அந்த வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்காளர் பட்டியல் இடம் பெற்று இருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே வாக்காளர் தனது வாக்கை செலுத்த முடியாது. அவருடைய பெயர் வாக்கு சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையை செலுத்த தங்களுடையவராவார். வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட போதிலும் வாக்காளர் தகவல் சீட்டு அடையாள ஆவணமாக அனுமதிக்கப்படாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக அசல் இந்திய கடவுச்சீட்டினை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

