இரவில் மதுக்கூடமாக மாறி வரும் வாலாஜாபாத் கிளை நுாலக வளாகம்
Kanchipuram King 24x7 |14 Jan 2025 9:36 AM GMT
நுாலக வளாகத்தில் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி எதிரே கிளை நுாலகம் இயங்குகிறது. பழைய பேரூராட்சி அலுவலகம் இயங்கி வந்த பழுதான கட்டடத்தில், இந்த நுாலகம் செயல்படுகிறது. தற்போது, புதிய நுாலகம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாலாஜாபாதில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர், வாசகர்கள் உள்ளிட்டோர், இந்த நுாலகத்திற்கு தினமும் வந்து செய்தித்தாள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் படித்து, தங்கள் வாசிப்பு திறனை மேம்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்த நுாலகத்தின் வளாகம் திறந்தவெளியாக உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த 'குடி'மகன்கள் இரவு நேரங்களில் நுாலக கட்டட திண்ணையை மதுக்கூடமாக பயன்படுத்துகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்கள், சிகரெட் அட்டைகள் மற்றும் தின்பண்டம் அடங்கிய பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால், காலையில் நுாலகத்திற்கு வருவோர், முகம்சுளிக்கும் நிலை உள்ளது. எனவே, நுாலகத்திற்கான புதிய கட்டடம் ஏற்படுத்தும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நுாலக வளாகத்தில் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story