திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.
Tiruvannamalai King 24x7 |14 Jan 2025 2:10 PM GMT
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 5.29 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்றில் இருந்தே வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும், மாலையில் கிரிவலம் செல்பவர்களின் கூட்டம் அதிகரித்தது. தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 4 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.46 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை மற்றும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
Next Story