விழுப்புரத்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்

விழுப்புரத்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்
தடம் புரண்ட பயணிகள் ரயில்
விழுப்புரம் ரயில் நிலையம் 2வது பிளாட்பாரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரயில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டது. ரயிலில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.ரயில் 200 அடி துாரம் சென்றவுடன், கடலுார் - புதுச்சேரி மார்க்க ரயில்கள் பிரியும் இடத்தை கடந்தது. அப்போது, இன்ஜினில் இருந்து 6வது பெட்டியின் முன்புற சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கி தடம் புரண்டது. உடனடியாக இதை உணர்ந்த லோகோ பைலட் குறைந்த வேகத்தில் சென்ற ரயிலை சாதுர்யமாக நிறுத்தினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பயணிகளை பாதுகாப்பாக இறக்கி பஸ்களில் செல்லுமாறு அறிவுறுத்தி, அனுப்பினர்.தொடர்ந்து, தடம் புரண்ட ரயிலின் சக்கரத்தை, ஹைட்ராலிக் தொழில்நுட்ப கருவி மூலம் அப்புறப்படுத்தி, 9.00 மணிக்கு ரயிலை விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால், செந்துார் எக்ஸ்பிரஸ், புதுச்சேரிக்கு செல்லும் பயணியர் ரயில், தாதர் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாக புறப்பட்டுச் சென்றன.ரயில் தடம்புரண்ட இடத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தலைமையில் தலைமை பொறியாளர் அஜித்குமார் மற்றும் பொறியாளர் குழுவினர் காலை 8.45 மணிக்கு பார்வையிட்டு, மாலை 3.00 மணி வரை ஆய்வு செய்தனர்.
Next Story