கனமழையால் கீற்று கொட்டகை இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட

குடும்பத்திற்கு உதவும் உறவுகள் அமைப்பு வீடு கட்டி கொடுத்து அசத்தல்
நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் கீழ வீதியில் வசித்து வருபவர் தனிக்கொடி. அவரது மகள் மகேஸ்வரி. இவர்கள் 2 பேரும் கீற்றுக் கொட்டகையில் வசித்து வந்தனர். இந்நிலையில், தற்போது, கன மழை பெய்து வருவதால், கீற்று கொட்டகை இடிந்து விழுந்து விட்டது. இதனால், தங்குவதற்கும், உறங்குவதற்கும், சாப்பாடு சாப்பிடுவதற்கும், உடுத்துவதற்கும், எந்த ஒரு வசதியும் இல்லாத நிலையில் இருந்து வந்தனர். எந்த ஒரு வசதியும் இல்லாமல் வயது பெண்ணை வைத்துக் கொண்டு முதியவர் துன்பப்படும் நிலை, நாகை உதவும் கரங்கள் அமைப்பிற்கு தெரியவந்தது. அதன்பேரில், உதவும் உறவுகள் அமைப்பின் நிர்வாகிகள், தெற்கு பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் கீழ வீதியில் உள்ள தனிக்கொடியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு தனிக்கொடியின் கீற்றுக் கொட்டகை இடிந்து தரை மட்டமாகி கிடப்பதை பார்த்தனர். எனவே, தனிக்கொடிக்கு வீடு கட்டி கொடுப்பது என முடிவு செய்தனர். அதன்பேரில், கீற்று கொட்டகை இருந்த அதே இடத்தில், 300 சதுரடியில் காம்பவுண்ட் சுவர் எழுப்பி மேலே தகர சீட் கொட்டகை அமைத்து, வீடு கட்டித்தர முடிவு செய்தனர். அதற்கு, ரூ.1.50 லட்சம் செலவு ஆகும் என முடிவு செய்தனர். அத்தொகையை உதவும் உறவுகள் அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் பகிர்ந்து கொடுத்து, வீடு கட்டிக் கொடுத்தனர். அந்த வீட்டின் திறப்பு விழா, தை மாதம் முதல் நாள் தமிழர் பொங்கல் நாளன்று (நேற்று முன் தினம்) மாலை நடைபெற்றது. ரிப்பன் வெட்டி, வீட்டினுள் சென்று சாமிக்கு தீபமேற்றி பிறகு தனிக்கொடியிடம் வீடு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், உதவும் உறவுகள் அமைப்பின் நிர்வாகிகள் சந்திரன், நிசார் அகமது, நாகராஜன், பிரவீன், சசிகுமார் மற்றும் ராஜா, முபின், விவேக், வரதராஜன், வெங்கடேஸ்வரா பட்டறை உரிமையாளர் மதியழகன், வேளாங்கண்ணி ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தசாமி, தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், சூழலியல் ஆர்வலர் ராமலிங்கம் மற்றும் தனிக்கொடியின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story