மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா
Thanjavur King 24x7 |15 Jan 2025 11:35 AM GMT
பொங்கல் விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் பாரம்பரிய மீனவர் நலச்சங்கம் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேசியதாவது, "சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனிமரம் தோப்பாகாது. எந்த ஒரு விஷயத்தையும் நான் தனி ஒருவனாக செய்ய முடியாது. நிர்வாகிகள், பொதுமக்கள் உங்கள் ஒத்துழைப்போடு தான் எதையும் செய்ய முடியும். விவசாயம் - மீனவர் சார்ந்த நாடாளுமன்றக் குழுவில் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவின் ஆய்வுக் கூட்டம் அந்தமானில் நடைபெறுகிறது. நேற்று குழுவின் தலைவர் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான, உழவர்கள், கால்நடைகள், உழவுக்கருவிகள், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாளை விட்டு விட்டு வரமுடியாது என மறுத்து விட்டேன். சமத்துவம் காக்கும், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் " இவ்வாறு பேசினார். நிகழ்வில், மீனவர் சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், வடுகநாதன், இப்றாகிம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன், திமுக இளைஞரணி தென்னங்குடி ராஜா, காங்கிரஸ் கட்சி கமால் பாட்சா, நாகூர் கனி, திமுக மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது, திமுக நிர்வாகிகள் மதி, பாண்டியன், அறிவுமணி மற்றும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவ கிராமத்தார்கள், மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், சமத்துவப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Next Story