தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி 'எந்தரோ மகானுபாவுலு' என்ற அஞ்சல் அட்டை தொகுப்பு வெளியீடு
Thanjavur King 24x7 |15 Jan 2025 11:39 AM GMT
அஞ்சல் அட்டை தொகுப்பு வெளியீடு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 178 ஆவது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை துவங்கி வரும் 18 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. தியாகராஜரை போற்றும் வகையில், தியாகராஜ ஸ்வாமிகள் இசை அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்களின் படங்களை கொண்ட "எந்தரோ மகானுபாவுலு" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டை தொகுப்பை, திருச்சிராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டலத் தலைவர் த.நிர்மலா தேவி வெளியிட்டார். இதனை, ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார். இது குறித்து மத்திய அஞ்சல் மண்டல தலைவர் நிர்மலா தேவி கூறியதாவது: தியாகராஜரின் ஆதரானை விழாவையொட்டி, வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் அட்டை தொகுப்பில், 23 அஞ்சல் அட்டை அடங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு அஞ்சல் அட்டையிலும் இசை மேதைகள், தியாகராஜரிடம் கொண்டுள்ள தூய பக்தியை சித்தரிக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அஞ்சல்அட்டை தொகுப்பு சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் இசை தான் உச்சத்தை அடையும் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் அட்டை தொகுப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உள்ள தற்காலிக அஞ்சலகத்தில் விற்பனைக்கு உள்ளது. ஆர்வமுள்ள அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு நிலையத்தை தொடர்பு கொண்டும் இந்த தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை 350 ரூபாயாகும்" இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருச்சி மத்திய அஞ்சல் மண்டலத்தின் வணிகம் மற்றும் தொழில்நுட்ப உதவி இயக்குனர் கே.கலைவாணி, தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கு.தங்கமணி, தியாகராஜர் சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story