திட்டச்சேரியில் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு
Nagapattinam King 24x7 |15 Jan 2025 2:54 PM GMT
மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜை
இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் தனித்தனியே பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபு. தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை அன்று, விவசாயம் செழிக்க உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்து வழிபாடு நடைபெறும். அதேபோல், வயல் காட்டிலும், களத்து மேட்டிலும் உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும், குடும்பத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பசுக்களுக்கும் நன்றி தெரிவித்து, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவை எந்திரமயமாகி விட்டதாலும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதாலும் கால்நடைகளை வளர்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து விட்டது. இந்நிலையில், நேற்று திருமருகல் ஒன்றிய பகுதிகள் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திட்டச்சேரியில் கால்நடைகளுக்கான மாட்டு பொங்கலும், விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது, மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, கயிறு மாற்றி, கொம்பு சீவி, வண்ணம் பூசி, நெட்டி உள்ளிட்ட மலர் மாலை அணிவித்து, சலங்கை பூட்டி அலங்கரித்தனர். பின்னர், மாடுகளை மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். மேலும், மாட்டு கொட்டகை அருகே பந்தல் போட்டு கரும்புகள் கட்டி புதிய மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ, பொங்கல் என கோஷமிட்டு உற்சாகமாக கொண்டாடினர். பின்னர், மாடுகளுக்கு பூஜைகளை தொடர்ந்து, மாடுகள் ஊர்வலமாக திட்டச்சேரி மெயின் ரோடு, பஸ்நிலையம் வழியாக, கடைத்தெருவில் உள்ள மகான் மன்சூர் வலியுல்லாஹ் பள்ளி வாசலுக்கு எதிரே உள்ள சங்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டு, மாடுகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து சாம்பிராணி போட்டு வணங்கினர். பின்னர், மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று தங்கள் வீட்டு வாசலில் உலக்கை போட்டு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். அதே போல், திருமருகல் ஒன்றிய பகுதிகள் முழுவதும் உழவர்களின் தோழனான கால்நடைகளுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில், மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story