மங்கலம்பேட்டை அருகே கோணாங்குப்பம் புனித பெரியநாயகி மாதா திருத்தல தேர்த்திருவிழா

மங்கலம்பேட்டை அருகே கோணாங்குப்பம்  புனித பெரியநாயகி மாதா திருத்தல தேர்த்திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் இந்து பாளையக்காரர்களாலும், தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவராலும் கட்டப்பட்ட புனித பெரியநாயகி மாதா திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழா ஜனவரி மாதம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஆண்டு திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வின் சிறப்பு திருப்பலி புதுவை-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு முனைவர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் திருத்தலம் முன்புள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னை உருவம் பொறிக்கப்பட்ட கொடியை, திருத்தல பங்கு தந்தை ஆக்னல் அடிகள் முன்னிலையில், முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் முகாசாபரூர் ஜமீன் பாளையக்காரர்கள் வழித்தோன்றல்களான ரமேஷ் கச்சிராயர், தினேஷ்குமார் கச்சிராயர், இணை குரு ஆரோக்கியதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் மற்றும் மறைவட்ட குருக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவை காரியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வேண்டியும் தமிழகத்தில் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகின்ற 23_ம் தேதி காலை தேர்த்திருவிழா திருப்பலியும், இரவு 9 மணியளவில் புனித பெரியநாயகி அன்னைத் தேர் பவனியும் வெகு விமரிசையாக நடைபெறும்.
Next Story