எருமை மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் வைத்த திராவிட கட்சியினர்

X
அரியலூர், ஜன.16- ஜெயங்கொண்டம்-மக்களுக்கு பயனளிக்கும் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி எருமை மாடுகளுக்கு பொங்கல் வைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. மாட்டுப் பொங்கலின் போது பசு மற்றும் காளை மாடுகளை மட்டுமே குளிப்பாட்டி பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். எருமை மாடுகளை ஒதுக்கும் போக்கு நிலவி வருகிறது. எருமை மாடுகளை ஒதுக்குவது வர்ணபேதம் என்றும் மக்களுக்கு பயனளிக்கும் எல்லா மாடுகளையும் ஒன்றாகக் கருதி கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டார். இதனையொட்டி, திராவிடர் கழகத்தினர் அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரத்தில் எருமைப் மாட்டுப் பொங்கலுக்கு ஏற்பாடு செய்தனர். சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் , தி.க.தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட தி.க, திமுகவினர் மற்றும் செங்குந்தபுரம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். எருமை மாடுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து பொங்கல் வைத்து எருமை மாட்டிற்கு பொங்கலோ பொங்கல் எனக்கூறி பொங்கல் ஊட்டி கொண்டாடினர். கொண்டாடுவோம் கொண்டாடுவோம் சமத்துவப் பொங்கல் கொண்டாடுவோம்.. வேண்டாம் வேண்டாம் மாடுகளுக்குள் பேதம் வேண்டாம். வேண்டும் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். செய்தியாளர்களிடம் பேசிய திக தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனை செல்வன்: மாட்டுப் பொங்கலின் போது எருமை மாடுகளை ஒதுக்குவது நிறபேதம் என்றும், எவ்வித பேதங்களுக்கும் இடமளிக்காமல் அனைத்து உயிர்களையும் ஒன்றாக நடத்துவது தான் திராவிடம் என்றும் அதன் அடிப்படையில் எருமை மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி அவைகளுக்கு பொங்கல் ஊட்டி மாட்டுப் பொங்கலையும் சமத்துவப் பொங்கலாக கொண்டாடியிருக்கிறோம் என கூறினார். வட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றி பேசினார். நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பு செயலாளர் தங்க ராமகிருஷ்ணன், பழ.புனிதவேல் தி.க கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைசெல்வன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கருணாநிதி திமுக கிளை செயலாளர்கள் நடராஜன், சுரேஷ், ஜெயராமன், செல்வதுரை, குமார், சின்னப்பன், சேகர், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

