கன்னிப் பொங்கலை முன்னிட்டு

ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகம்
தமிழகத்தில், தை பொங்கல் விழா கடந்த மூன்று நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில், வெளிப்பாளையம், தாமரை குள தெரு, வாய்க்கால் கரை தெரு, பெருங்கடம்பனூர், தேவூர், கீழ்வேளூர், காக்கழனி, வலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கன்னிப் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், பானை உடைத்தல், கோலப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருவர் மீது ஒருவர் கலர் சாயங்கள் பூசியும், மஞ்சள் நீர் ஊற்றியும் அன்பை வெளிப்படுத்தி உறவுகளை வலுப்படுத்தினர். இதேபோல், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் சாலைகளில் அமர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமாவதை தடுக்கும் விதத்தில், விழிப்புணர்வு வண்ண கோல போட்டிகள் நடைபெற்றன. பாரம்பரியத்தை மறக்காமல் சிறுவர்கள், உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று கும்மி கொட்டி கூட்டாஞ்சோறு எனப்படும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெளி மாநிலங்களிலும், பிற மாவட்டங்களிலும் பணி நிமித்தமாக சென்றவர்கள், பொங்கல் விழாவை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பி, தங்களது உறவினர்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
Next Story