அவிநாசியில் தைப்பொங்கல் திருநாளில் பண்பாடும் கலாச்சாரமும் மிளிர்ந்திடும் வகையில் பாரம்பரிய நிகழ்ச்சிகள்

அவிநாசியில் தைப்பொங்கல் திருநாளில் பண்பாடும் கலாச்சாரமும் மிளிர்ந்திடும் வகையில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றத்தால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற விழாக்களை விட பொங்கல் பண்டிகைக்கென தனிச் சிறப்பு உண்டு. பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்களை கிராமப்புறங்களில் தான் முழுமையாக காண முடியும். ஏனெனில், பொங்கல் பண்டிகை என்பது விவசாயம் மற்றும் கலாச்சாரம் சார்ந்ததாகவே கொண்டாடப்படுகிறது. நாகரீக வளர்ச்சியின் தாக்கம் மற்றக் கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால் பொங்கல் பண்டிகை, மற்றைய கலாச்சாரத்தை தம்முடன் இணைத்துக் கொண்டு மேன்மேலும் சிறப்புப் பெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை சார்பில் தைப்பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் பாரதியார் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பொங்கல் வைத்து கும்மியாட்டம், அவிநாசி குரு நாட்டியாலயா பரதநாட்டியம், சிறு தானியங்களின் மகத்துவத்தைப் பற்றிய நமக்கு நாமே மருத்துவர் உரை நிகழ்ச்சி, ஸ்ரீ சக்தி சிலம்பக் கலைக்கூடத்தின் சிலம்பாட்டம், வேட்டுவபாளையம் காராளர் கலை குழுவின் கம்பத்தாட்டம், பல்லடம் எம் யோனா குழுவினரின் தந்திரக் கலை மேஜிக் ஷோ, சென்னை சிரிப்பானந்தா சம்பத்தின் சிரிக்கலாம் வாங்க சிரிப்பு நிகழ்ச்சி, வெள்ளலூர் கோபாலகிருஷ்ணனின் பரதநாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த பொங்கல் திருநாள் கலை நிகழ்ச்சிகளை கண்டு அவிநாசி பகுதிவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடிய விதம், அனைவரையும் கவர்ந்ததோடு,அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவியதை காண முடிந்தது.
Next Story