வெப்படை நான்கு வழிச்சாலை பகுதியில் சாலை மறியல்

X
Komarapalayam King 24x7 |17 Jan 2025 7:59 PM ISTஎலந்தக்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் தமிழக அரசு இணைக்கும் முடிவை கைவிடக் கோரி சாலை மறியல் போராட்டம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகாவில் எலந்தக்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் உத்தேச முடிவை கைவிடக் கோரியும், எலந்தக்குட்டை ஊராட்சி தொடர்ந்து ஊராட்சியாக தொடர வலியுறுத்தியும் வெப்படை நான்கு ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் . தனேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளரும், படைவீடு முன்னாள் பேரூராட்சி தலைவருமான பெருமாள், எலந்தக்குட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தின் ஒன்றிய செயலாளர் சந்திரமதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் சர்வ கட்சியினர், ஊர் பொதுமக்கள் என 700-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டோரை காவல்துறை கைது செய்தனர். முன்னதாக திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் மற்றும் குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்ட களத்திற்கு வந்திருந்தனர். எலந்தக்குட்டை ஊராட்சியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தில் 1700 பேர் பயன்பெறுகின்றனர். எலந்தக்குட்டை ஊராட்சியை பொருத்தவரையில் 1600 ஹெக்டர் பரப்பு கொண்டதாகும். இதில் விவசாய பூமி 920 ஹெக்டர். மீதி தரிசு மற்றும் புறம்போக்காக உள்ளது. இந்த ஆண்டு 150 வீடுகள் ஊராட்சி மூலம் கட்டப்படுகிறது. எனவே இது போன்ற 42 வகையான ஊராட்சி சலுகைகள் பறிபோகும். மேலும் வீட்டு வரி, சொத்து வரி, தொழில்வரி, பல மடங்கு அதிகரித்து தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
Next Story
