திமுக கவுன்சிலரை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியலில்
Tiruppur King 24x7 |18 Jan 2025 2:18 AM GMT
பல்லடம் திமுக கவுன்சிலரை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கல்லம்பாளையம் அர்ஜுன் காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இன்று இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர். இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் மேளங்கள் அடித்தும் நடனங்கள் ஆடியும் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன் அப்பகுதி மக்களிடையே எங்களது கோவிலுக்கு வந்து மேளம் அடிக்க சொன்னால் அடிக்க மாட்டீர்கள் நீங்கள் பொங்கல் விழா கொண்டாடும் போது மட்டும் மேளம் அடிப்பீர்களா என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் அப்பகுதி மக்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதியை குறித்து தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பூபதி என்ற இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திமுக கவுன்சிலரை கண்டித்து மங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடனடியாக கவுன்சிலர் பாலகிருஷ்ணன் மீது வாக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இதனையடுத்து அங்கு வந்த பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் பொதுமக்களிடம் உடனடியாக புகார் அளிக்கும்படியும் அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். திமுக நகர கவுன்சிலரை கண்டித்தும் கைது செய்யக்கோரியும் நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story