பனிப்பொழிவு காரணமாக இலந்தை பழங்களில் பூச்சி தாக்குதல்

மகசூல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை
பழங்களில், சிறிய வகையானதும், மருத்துவ குணங்கள் நிறைந்ததுமான இலந்தைப் பழ சீசன் களை கட்டத் தொடங்கியுள்ளது. சீனாவை தாயகமாக கொண்ட இலந்தைப் பழம், நாட்டு இலந்தை, சீமை இலந்தை ஆகிய வகைகளில் கிடைக்கின்றன. இலந்தைப்பழங்கள், நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் கனிகளை தருகின்றன. மருத்துவ குணம் கொண்ட இலந்தை பழம் நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான, தெற்குப் பொய்கை நல்லூர், வேளாங்கண்ணி, பரவை, வீரன்குடிக்காடு, காரைக்குளம், ரெட்டாலடி, பூவைத்தேடி மற்றும் கிராமப்புற பகுதிகளில் வளர்கிறது. இலந்தைப் பழங்களை வியாபாரிகள் சேகரித்து, பரவை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது நாகையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பழங்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குவதுடன், இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story