சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி அறிமுகம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
Chennai King 24x7 |18 Jan 2025 9:15 AM GMT
போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் செல்போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகியவற்றை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா தொடங்கி வைத்தார்.
மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் தேசிய இணையவழி சேவை 2.0 மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான ‘சஞ்சார் சாதி’ செல்போன் செயலி திட்டங்களை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கினார். இத்திட்டங்கள் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உரிமம் சேவை பகுதி (எல்எஸ்ஏ) கூடுதல் தலைமை இயக்குநர் சியாம் சுந்தர் சந்தக், துணை தலைமை இயக்குநர் எம்.சந்திரசேகர், இயக்குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவு செய்வதன்மூலம், அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நமது பெயர் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தால், அதையும் கண்டறிந்து துண்டித்துவிடலாம் என தெரிவித்தார்.
Next Story