பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல்
Thanjavur King 24x7 |18 Jan 2025 10:15 AM GMT
கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் பயன்பாடின்றி பாழாகி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சியில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் தான் முக்கியமான விளையாட்டு மைதானமாக இருந்து வருகிறது. திடலில் முறையான பராமரிப்புகள் இன்றி காணப்படுவதால் விளையாட்டுத் திடலை பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் மண்டியுள்ளன. புதா் மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள், பாம்புகள் சுற்றித் திரிகின்றன. கிராம சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடவும், உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடாமல் இணையவழி விளையாட்டுகளிலே மூழ்கி கிடக்கின்றனர். அதனை மாற்றிடும் வகையில் விளையாட்டு மைதானங்களை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலமன்ற அமைப்பு மைதானத்தை சீரமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பள்ளி மாணவர்கள் போட்டி விளையாட்டுகளுக்கு தயார் ஆகும் வகையிலும், பெரியவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன விளையாட்டுத் திடலாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது முன்னாள் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா...?
Next Story