தவறான தகவல் பரப்பியதாக தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
Chennai King 24x7 |18 Jan 2025 1:09 PM GMT
தவறான தகவல் பரப்பியதாக தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை தனது யூடியூப் சேனல் வழியாக பரப்பியதாக சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சவுக்கு சங்கரை கடந்த டிச.24 அன்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பதிலுக்கு சவுக்கு சங்கர் தரப்பில் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது போலீஸார் தொடர்ச்சியாக வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரரின் பேட்டி பிடிக்கவில்லை என்பதற்காக கைது நடவடிக்கை தேவையில்லாதது. இந்த வழக்கில் மனுதாரர் மீது, இரு முறை குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு நிவாரணம் வழங்கியபோது அடுத்தடுத்து காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இத்தகைய அணுகுமுறை சட்டத்தின் மீதான மரியாதையை குறைக்கும் விதமாக உள்ளது. மனுதாரர், அற்ப காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. காவல்துறையின் தவறான நடத்தை, எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிகிறது என்பதால், அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது, என தெரிவித்துள்ளார்.
Next Story