மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை
Nagapattinam King 24x7 |21 Jan 2025 1:09 PM GMT
உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ஆந்திரா போன்று ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் துறை மூலமே உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில், மாவட்ட குழு உறுப்பினர் கஜேந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 75 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், நாகை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
Next Story