குவைத் நாட்டில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்ததால் பரிதாபம்

மூச்சு திணறல் ஏற்பட்டு மங்கலம்பேட்டையை சேர்ந்த இரண்டு டிரைவர்கள் பரிதாப சாவு
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை, கீழவீதியை சேர்ந்த அப்துல் சலாம் மகன் முஹம்மது ஜூனைது (வயது.45) குவைத் நாட்டில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ரஷியா பேகம் என்கிற மனைவியும், ஹாஜிரா பேகம் (19), ஆசிமா (15) என 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், இவரது மூத்த மகள் ஹாஜிரா பேகத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமணத்திற்காக குவைத் நாட்டில் இருந்து ஊருக்கு வந்த முஹம்மது ஜூனைத், மகளின் திருமணம் முடிந்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் குவைத் நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதே போல மங்கலம்பேட்டை அண்டகுளத்தார் தெருவை சேர்ந்த பிச்சைகனி மகன் முஹம்மது யாசின் (30). குவைத் நாட்டில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மும்தாஜ் பானு என்கிற மனைவியும், 3 வயதில் முஹம்மது ஷபான் என்கிற ஒரு மகனும் உள்ளனர். குவைத் நாட்டில் வேலை நிமித்தமாக பாலைவனப் பகுதிக்கு சென்ற முஹம்மது ஜூனைது (45), முகமது யாசின், திருவண்ணாமலையை சேர்ந்த கவுஸ் பாஷா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் என நான்கு பேரும் கடந்த 18ந் தேதி தற்காலிக குடியிருப்பில் தங்கி இருந்தனர். அங்கு குளிர் மிகுதியாக இருந்ததால் அடுப்புக்கரியை பயன்படுத்தி நெருப்பு மூட்டி குளிர்காய்ந்துள்ளனர். அப்போது அந்த நெருப்பில் இருந்து வெளியேறிய புகை அறை முழுவதும் மூடப்பட்டிருந்ததால் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே புகை மூட்டமாக காணப்பட்டது. அப்போது அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும் புகை மூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்கள். பாலைவனப் பகுதி என்பதால் போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் புகை மூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முகமது ஜூனைத், முகமது யாசின் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் என மூவரும் தூக்கத்திலேயே இறந்து கிடந்தனர். இவர்களுடன் தங்கி இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கவுஸ் பாட்ஷா அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் உயிர் தப்பினார். மங்கலம்பேட்டையை சேர்ந்த இறந்த இருவரது உடல்களையும் குவைத் நாட்டில் இருந்து மங்கலம்பேட்டைக்கு எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கு போதிய வசதி இல்லாததால் இருவரது உறவினர்களும் உடல்களை அங்கேயே அடக்கம் செய்ய கூறிவிட்டார்கள். இரண்டு டிரைவர்களின் குடும்பத்தினரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மங்கலம்பேட்டையைச் சேர்ந்த இருவர் குவைத் நாட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story