முதனை சித்தர் ஏரிக்குள் மின் கம்பங்கள்

முதனை சித்தர் ஏரிக்குள் மின் கம்பங்கள்
வேல் மூழ்குதல் நிகழ்ச்சியின் போது மின்  விபத்து ஏற்படும் அபாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார் கோவில் அமைந்துள்ளது. தமிழக முழுவதும் உள்ள பல்வேறு குடும்பத்தினருக்கு இந்த கோவில் குலதெய்வ கோயிலாக உள்ளது. இந்தக் கோவிலில் தை மாதத்தில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா அன்று கோவில் அருகே உள்ள சித்தர் ஏரியில் வேல்மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது இந்த ஏரியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்வார்கள். ஆனால் வேல் மூழ்குதல் நடைபெறும் இடத்தில் ஏரி பகுதியின் உள்ளே கரை ஓரத்தில் தண்ணீரில் இரண்டு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாக மின்விநியோகம் நடந்து வருகிறது. மேலும் இந்த மின் கம்பிகள் செல்லும் வழியில் அதிக அளவு மரங்களும் உள்ளன. சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த மரங்களிலும் இளைஞர்கள் மாணவர்கள் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் தற்போது மின் கம்பிகள் செல்வதால் இந்த மரங்களில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போது அவர்களை மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீருக்குள் மின்கம்பம் அமைந்துள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த ஏரியை பொதுமக்கள் தங்கள் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். நீர்வழி புறம்போக்கில் வீடுகள் கட்டியிருந்தால், வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் அதிகாரிகள், வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் ஏரிக்குள் மின்கம்பத்தை நட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீருக்குள் மின்கம்பம் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படவும், வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இந்த ஏரி வழியாக மின்கம்பங்கள் செல்வதால் ஏதேனும் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின்கம்பங்களையும் வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story