ராமநாதபுரம் ரயில் நிலைய நுழைவு வாசல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்தது

ராமநாதபுரம் ரயில் நிலைய நுழைவு வாசல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் பரமக்குடியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். முகமது சித்திக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கினோவா ரிச் 100 (Okinawa Ridge 100 Electric Scooter) என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவரது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ராமநாதபுரம் வந்துள்ளார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் படிக்கும் அவரது மகன் சென்னை விரைவு ரயிலில் ராமநாதபுரம் வந்துள்ளார். ரயில் வந்த தனது மகனை அழைத்து வருவதற்காக ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற முகமது சித்திக் ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். முகமது சித்திக் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்தில் ரயில் நிலையத்தின் வாசலில் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து முகமது சித்திக் ஓடி வந்து பாhத்த போது அவரது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து முதலில் கரும்புகை வெளி வந்த நிலையில் பின்னர் ஸ்கூட்டர் தீப்பிடித்து மலமலவென எரிய தொடங்கியது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவசர அவசரமாக ஆட்டோக்கை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது தீ பட்டதில் அந்த வானத்திற்கு சிறிய அளவு சேதம் ஏற்பட்டது. இருப்பினும் முகமது சித்திக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து முகமது சித்திக் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். இதுவரை தீ விபத்து எதுவும் ஏற்பட்டதில்லை.இன்று காலை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த போது தீ பிடித்து எரிந்து விட்டது. பேட்டரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என வாகன விற்பனையாளர் தெரிவிப்பதாக முகமது சித்திக் தெரிவித்தார்.
Next Story