ஆடு மேய்ந்த தகராறு பீர் பாட்டிலால் தொழிலாளி குத்திக் கொலை, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Thanjavur King 24x7 |22 Jan 2025 7:09 AM GMT
கிரைம்
தஞ்சாவூர் அருகே அருமலைக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த அருணாசலம்,60,. இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியிலுள்ள வயல் வரப்பில் ஆடு, மாடுகளை மேய விட்டார். இது தொடர்பாக அருணாசலத்துக்கும், அதே ஊரிலுள்ள குடியானத் தெருவைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக, அருணாசலம் சைக்கிளில் அருமலைக்கோட்டை வடசேரி வாய்க்கால் மேல பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் ஆடு மேய்ப்பது தொடர்பாக எதிரே டூ வீலரில் வந்த குடியானத் தெருவைச் சேர்ந்த விவேக்,28, தகராறில் ஈடுபட்டார். இதில், விவேக் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, அருணாசலத்தின் கையில் அடித்து உடைத்து, அவரது தொண்டை குத்தினார். இதனால், பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று விவேக்கை கைது செய்தனர். இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். அருணாசலத்தின் மகனுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும். அருமலைக்கோட்டை பகுதியிலுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதுவரை அருணாச்சலத்தின் உடலை வாங்க வாங்க மறுத்தும் கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலர் தமிழன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அபிமன்னன், உள்ளிட்டோர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் நேற்று தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., இலக்கியா, டி.எஸ்.பி.,க்கள் சோமசுந்தரம், முருகவேல், உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசாணைப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து வகையான பணப்பலன்கள், இறந்தவரின் வாரிசுகள் உரிய ஆவணங்களை சமர்பித்து அனைத்து நிவாரணங்கள் பெறலாம் என்றும், மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து அத்துறை அலுவலரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அருணாச்சலத்தின் உடலை வாங்கி சென்றனர்.
Next Story