ஏக்கருக்கு பத்து மூட்டை கூட தேறதாது: பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் கலெக்டரிடம் மனு
Thanjavur King 24x7 |22 Jan 2025 8:45 AM GMT
விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி, ராயந்துார், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, புதுக்கல்விராயன்பேட்டை, பழைய கல்விராயன்பேட்டை, மருதக்குடி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி வந்த சம்பா பருவ நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இப்பகுதி சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 பேர் நேற்று பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பாளரான விவசாயி கனகராஜன் கூறியதாவது: கடந்த வாரம் பெய்த பலத்த மழை பெய்ததால், எங்களது பகுதியில் சம்பா பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. முளைத்து வந்த கதிர்கள் அனைத்தும் பதராக உள்ளன. அதிலும், எடைப்பழம் என்கிற பூஞ்சாண நோய் தாக்கப்பட்டு, 50 சதவீதம் பாதிக்கப்பட்டது. இது குறித்து கலெக்டரிடம் ஒரு மாதத்துக்கு முன்பாக மனு அளித்து முறையிட்டோம். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அனைத்து பயிர்களும் முழுமையாக அடியோடு சாய்ந்துவிட்டன. ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். இதனால், ஏக்கருக்கு 10 மூட்டைகள் கூட தேறாத நிலை உள்ளது. பாதிக்கு பாதிக்கூட மகசூல் கிடைக்காத நிலை உள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க வேண்டும். அதற்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Next Story