சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் மல்லிப்பட்டினம் துணை சுகாதார நிலையம்... சீரமைக்கக் கோரிக்கை 

சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் மல்லிப்பட்டினம் துணை சுகாதார நிலையம்... சீரமைக்கக் கோரிக்கை 
கோரிக்கை
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் ஷாஃபி இமாம் தெருவில், துணை சுகாதார நிலையம் அருகே, சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உருவாகி இருக்கிறது. சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், மல்லிப்பட்டினம் துணை சுகாதார நிலையம் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, செவிலியர்கள் மூலம் பெண்களுக்கு கர்ப்ப கால பதிவேடுகள் பராமரிப்பு, தடுப்பூசிகள், பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள், மாதாந்திர பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை சுகாதர நிலையம் அருகே சுகாதாரமின்றி  பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியவை கொட்டப்பட்டு, அதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த இடத்தில் பன்றிகளும் சுற்றித் திரிகின்றன. பரிசோதனைக்கு வரக்கூடியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க கூடிய குழந்தைகளுக்கும் எளிதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் அருகே உள்ள புதுக்குளத்தில் கழிவுநீர் கலந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்த் தொற்று பரவும் அபாயச்சூழல் இருக்கிறது. துணை சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரும் செவிலியர்களும் துர்நாற்றத்திலேயே இருந்து பணி செய்ய வேண்டி உள்ளது.  துணை  சுகாதார நிலையம் அருகே உள்ள பகுதிகளை சுற்றி உடனடியாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதுக்குளத்தை சுற்றியும் உள்ள குப்பைகளை அகற்றிட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
Next Story