உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

அவசர சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு அனைத்து அடிப்படை மருந்துகளும் இருப்பில் உள்ளதா எனவும், 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் வகையில் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்களா என்பது குறித்தும் பார்வையிட்டார்
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், குன்னம் வட்டத்திற்குட்பட்ட துங்கபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் மாவட்ட நிலை அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் வட்ட அளவில் அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி-2025 மாதம் மூன்றாவது புதன்கிழமை (15.01.2025) அன்று பொங்கல் திருநாள் அரசு விடுமுறை என்பதால் நான்காவது புதன்கிழமையான இன்று (22.01.2025) ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் நடைபெற்றது. இந்த மாதம் குன்னம் வட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்,துங்கபுரம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், துங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்யும் வகையில் மாணவ,மாணவிகளுக்கு கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பி, தமிழ் புத்தகத்தினை வாசிக்கச் சொல்லி, பாடப் பிரிவிலிருந்து கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ,மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவின் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார். உணவு தயாரிக்க தேவையான உண பொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதா எனவும், தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, துங்கபுரம் குழந்தைகள் நல மையத்தில், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளின் எடை, வளர்ச்சி, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பது குறித்தும், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, இன்றைய உணவு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார். தொடர்ந்து, துங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் ஊரக விளையாட்டு மைதான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனையில், நோயாளிகளின் வருகை, புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தினசரி புற நோயாளிகளாக எத்தனை நபர்கள் வருகை புரிகிறார்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவசர சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு அனைத்து அடிப்படை மருந்துகளும் இருப்பில் உள்ளதா எனவும், 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் வகையில் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்களா என்பது குறித்தும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, துங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள நியாயவிலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்களின் தரம், எடை இயந்திரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பொருட்கள் அனைத்தும், தரமாக உள்ளதா, கிடைக்கப்பெறுகிறதா என்று பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளில்,குன்னம் வட்டாட்சியர் திருமதி கோவிந்தம்மாள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Next Story