மின்மாற்றி அருகே கொட்டப்படும் குப்பைகளால் மீண்டும் தீ விபத்து அபாயம்

மின்மாற்றி அருகே கொட்டப்படும் குப்பைகளால் மீண்டும் தீ விபத்து அபாயம்
குமாரபாளையம் மின்மாற்றி அருகே கொட்டப்படும் குப்பைகளால் மீண்டும் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை குளத்துக்காடு பகுதியில் பவர் ஹவுஸ் உள்ளது. இங்கிருந்துதான் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. பவர் ஹவுஸ் இருக்கும் இடம் தட்டான்குட்டை  ஊராட்சி. இதன் எதிர்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகள் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும். பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள நிலையில், இங்கிருக்கும் குடியிருப்பு வாசிகள், பவர் ஹவுஸ் இருக்கும் இடம் அருகே, மற்றும்  மின் மாற்றி அருகே  மலை போல்  குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனை அகற்ற குப்பாண்டபாளையம் ஊராட்சியினர் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும்  எடுப்பது இல்லை. சில நாட்கள் முன்பு இந்த இடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அருகில் பவர் ஹவுஸ் இருப்பதால், மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர். குமாரபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதே நிலை நீடித்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட்டு, குமாரபாளையம் நகருக்கு மின் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும். ஆகவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம், செலுத்தி இங்கு குப்பை கொட்டாமல் இருக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story