உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ், திருச்செங்கோட்டில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.
Namakkal (Off) King 24x7 |22 Jan 2025 2:23 PM GMT
தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் திருச்செங்கோடு வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு வட்டம், மாமுண்டி ஊராட்சி மற்றும் பள்ளக்குழி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கான மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். தினசரி உணவு பட்டியலின்படி வழங்கப்படுகிறதா, எனவும், ஆசிரியர்களிடம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6.18 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளக்குழி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவியர் கழிப்பிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாமுண்டி மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார். மாமுண்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும், மாமுண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாமுண்டி ஊராட்சியில் பேருந்து பயணிகளிடம் மகளீருக்கான விடியல் பயணத் திட்டம் குறித்து கேட்டறிந்தார் மாமுண்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் மானிய திட்டத்தில் பட்டு வளர்ப்பு கொட்டகை, தளவாடப் பொருட்கள் மற்றும் மல்பரி இலை ஆகியவை மானியத்தில் பெற்று பட்டு வளர்ப்பு தொழில் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு அரசின் மூலம் கிடைக்கப்பெற்ற மானியம், இதன்மூலம் கிடைக்கப்பெறும் இலாபம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும், மாமுண்டி ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் சொட்டுநீர் பாசனம் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளக்குழி அக்ரஹாரம் ஊராட்சி நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, முறையாக நூல்கள் மற்றும் வருகை பதிவேடுகளை பராமரிக்க நூலகருக்கு அறிவுறுத்தினார். செண்பகமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட நகைக்கடன், பயிர் கடன், திரும்ப செலுத்தப்பட்ட விவரங்கள், நிலுவையில் உள்ள கடன், இந்நிதியாண்டில் வழங்கப்பெற வேண்டிய தவணை விவரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இச்சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் பயன்பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் சான்றுகளின் விவரங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, செண்பகமாதேவி நியாய விலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் மொத்த இருப்பு, உணவுப் பொருட்களின் தரம், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பள்ளக்குழி அக்ரஹாரம் கிராம அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். பள்ளக்குழியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உயிர்ம வேளாண்மை மாதிரி பண்னை திடலைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மல்லசமுத்திரம் அரசினர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் விவரம், தினசரி உணவு பட்டியல், உணவின் தரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். பருத்திப்பள்ளி துணை சுகாதார நிலையம் மற்றும் இராமாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பருத்திப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுறத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டமொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை மற்றும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நெய்க்காரப்பட்டியில் நடைப்பெற்று வரும் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story