அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி? - சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு
Chennai King 24x7 |22 Jan 2025 2:26 PM GMT
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா நகர் சிறுமி வாக்குமூலம் அளித்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக புலன் விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தும், இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இந்த வழக்கில் கைதாகியுள்ள பெண் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், முக்கிய நபரான சதீஷ் ஆகியோர் மீதான வரைவு குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும், ராஜி மீதான குற்றப்பத்திரிகைக்கு அரசின் அனுமதி கிடைத்தவுடன் மூவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சம்பத்குமார், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி அளித்த வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து போலீஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்றும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு இதுவரையிலும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் கூறினார். அதையடுத்து நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய ஏதுவாக, அதற்கான அரசின் அனுமதியை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு கோரி தனியாக மனுத் தாக்கல் செய்ய சிறுமியின் தாயாருக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story