திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற 309-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அளவில், மாவட்டளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.டி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எம்.வேலாயுதம் தொடக்க உரையாற்றினார். மாநில தணிக்கையாளர் எம்.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் சமுத்திரக்கனி, முன்னாள் மாநில துணைத் தலைவர் எஸ்.கலாவதி, வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.ஞானசேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆலம் விழுதுகள் துணை ஆசிரியர் ஆர்.தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களித்து இந்த ஆட்சியைக் கொண்டு வந்தனர். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற 309-வது வாக்குறுதி, 70 வயது முடிந்ததும் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குவோம் என்ற 308-வது வாக்குறுதி உள்ளிட்டவை நிறைவேற்றப்படவில்லை. காசில்லா மருத்துவம் என்று மூத்த குடிமக்களான ஓய்வூதியதாரர்களை முந்தைய அரசு ஏமாற்றியது. தி்முக ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுடைய ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிய எங்களுக்கு ஏமாற்றம்தான் தொடர் கதையாக இருக்கிறது. எங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேறொரு அணி பற்றி சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிறைவில், வடசென்னை மாவட்ட பொருளாளர் கே.தனஞ்செயன் நன்றி கூறினார்.
Next Story