அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்
X
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடி மாற்றம்
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கான தேர்தல் நடத்தும் அலுவலராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ் செயல்பட்டு வந்தார்.இந்த தேர்தலில் போட்டியிட கடந்த 10, 13, 17ம் தேதிகளில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 58 வேட்பாளர்கள் 65 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த 18ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், அபிடவிட் இணைக்கப்படாத 3 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 20ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதில், 8 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி, 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இறுதி செய்யப்பட்டது.அப்போது, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கர்நாடக மாநிலம், பெங்களூரு, உதயா நகர், மஞ்சுநாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்த பெண் பத்மாவதி என்பவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், வேறு மாநிலத்தை சேர்ந்த அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சுயேட்சை வேட்பாளர்கள் பத்மராஜன், நூர்முகமது, அக்னி ஆழ்வார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று முன் தினம் அதிகாலை 1.30 மணியளவில் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46ஆக குறைந்தது. இந்த விவகாரத்தில், வேட்புமனுக்கள் பரிசீலனையின்போதே அவரது மனுவை தள்ளுபடி செய்யாமல் ஏற்றுக் கொண்டு, பின்னர் அதுகுறித்து சுயேடை வேட்பாளர்கள் கேள்வி எழுப்பிய பின்னரே அதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வெளிமா நில வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. அதனடிப்படையில், ஈரோடு கிழக்குத் தொகுதி அலுவலராக பணியாற்றிய மனிஷ் நேற்று முன் தினம் இரவோடிரவாக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றுப் பணியிடம் எதுவும் வழங்கப்படவில்லை.அவருக்கு பதிலாக ஒசூர் மாநகாட்சி கமிஷனராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
Next Story