நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நீர்வழியில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை இடிக்க விசிகவினர் எதிர்ப்பு

நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நீர்வழியில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை இடிக்க விசிகவினர் எதிர்ப்பு
X
ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் அருகே அய்யனார் குளத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 2013ஆம் ஆண்டில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சக்திவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீர் வழியில் அரசு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இந்த நீர் வழியை தடுத்து கட்டிடங்கள் கட்டினால் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊராட்சி கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அவர் கட்டிடம் கட்ட தடை விதிக்க வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அதிகாரிகள் கட்டிடம் கட்ட மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 9 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் விவசாயி சக்திவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று விருத்தாசலம் வருவாய் துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அங்கன்வாடி கட்டிடத்தை இடிப்பதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை, நகர செயலாளர் முருகன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க கூடாது, மாற்று இடம் ஒதுக்கி அங்கன் வாடி மையத்தை கட்டிக் கொடுத்து விட்டு, இடிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story