ஆரணி காமராஜர் சிலை அருகில் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம். அப்பகுதி மக்கள் நீண்ட நேர விவாதத்தால் பரபரப்பு.
ஆரணி காமராஜர் சிலை அருகில் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதியை பொதுப்பணித்துறையினர் அகற்ற முற்பட்டபோது அப்பகுதி மக்கள் நீண்ட நேர வாக்குவாதம் செய்ததால் அங்கு வருவாய்துறையினர், காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆரணி காமராஜர் சிலை அருகிலிருந்து ஆற்றுக்கால்வாய் கேசிகே நகர், கே.கே.நகர் வழியாக பையூர் ஏரியை சென்றடைகிறது. இதில் 38 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். மழை காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், ஏரிக்கு தண்ணீர் செல்ல வழியில்லாததாலும் ஆக்கிரமிப்பு அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்யவேண்டும் என தன்னார்வலர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆக்கிரமிப்பு செய்துள்ள 38 பேருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பாக வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 6 மாதத்திற்கும் முன்பாகவும் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 38 பேரும் ஆரணி வட்டாட்சியரிடம் எங்களுக்கு வேறு இடம் ஒதுக்கி கொடுங்கள் என்றும் பின்னர் காலி செய்கிறோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் வேறு இடம் எங்கும் இல்லை அரசு உத்தரவுப்படி உங்களுக்கான காலம் முடிந்துவிட்டது. ஆகையால் விரைவில் காலி செய்யுமாறு வருவாய்துறை சார்பிலும், பொதுப்பணித்துறை சார்பிலும் தெரிவிக்கப்ப்டடது. பின்னர் கடைசியாக 23-1-2025 தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை இடித்து அகற்றப்படும் என நோட்டீஸ் அனுப்பினர். ஆகையால் வியாழக்கிழமை காலை முதலே அப்பகுதியில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் ஆரணி நகர இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம், எஸ்.ஐக்கள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எங்களுக்கு இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் கௌரி, ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் இனி கால அவகாசம் தரமுடியாது என்று கூறியதால் அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தப்பட்டு ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிிருந்த வீடுகளை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



