திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை கேந்திரா மையம் துவக்கம்
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களின் கீழ் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களும், தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் எளிதாக பெறுவதற்காக மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சேவாக் கேந்திரா மையங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் சீனிவாசன் புள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது தலைமை தபால் நிலைய அலுவலகத்திலேயே பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் அமைக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாஸ்போர்ட் எடுக்க இனி கோவைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, திருப்பூரிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது முதல் பாஸ்போர்ட் பெறுவது பாஸ்போர்ட் புதுப்பிப்பது தவறுகளை திருத்திக் கொள்வது என அனைத்து விதமான சேவைகளையும் திருப்பூரிலேயே செய்து கொள்ளலாம். இதனால் பொதுமக்களின் அலைச்சலும் பயண செலவுகளும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளொன்றுக்கு 40 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது புதுப்பிப்பது குறித்த சேவைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து பொதுமக்களின் வருகையை பொறுத்து கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது என்றும், திருப்பூர் மாவட்டத்தில் இனி அதிகமானோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில் முதலில் தேசிய கீதமானது பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் தமிழ்தாய் வாழ்த்தையும் பாட சொல்லியதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
Next Story



