அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பணியிடை பயிற்சி
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் நிதிநல்கையுடன் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் 50 பேருக்கு 20. 1 .2025 முதல் 21. 24 .1 .2025 வரை 5 நாட்கள் அறிவியலில் தோன்றியுள்ள புதிய தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டது . இப்ப பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொ)முனைவர் து .சேகர் தலைமை வகித்து, பள்ளி மாணவர்கள் சிறந்த குடிமகன்களாக உருவாகுவதற்கு அறிவியல் புதுமைகளை ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும் என்றார் . நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திரு தேவநாதன் கலந்து கொண்டு, பெரம்பலூர் பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அறிவியல் விஞ்ஞானிகளாக வலம் வருவதற்கு அறிவியல் ஆசிரியர்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியின் நிறைவு பேருரையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உயிர் தகவல் இயல் துறையின் துறை தலைவர் முனைவர் செல்லபாண்டி கலந்து கொண்டு எதிர்காலத்தில் மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்தாலும் கல்வியால் மட்டுமே சான்றோர்களாக வளர்ந்து சிறந்த பொறுப்புகளில் அமர முடியும் ,அதற்கு அறிவியல் ஆசிரியர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார். இவ்விழாவில் சென்னை சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பேராசிரியர் முனைவர் செந்தில் கண்ணன் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துரையில் அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். பயிற்சியில் பங்கேற்ற அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சி குறித்து தெரிவிக்கும் போது, பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், இசை துறை ஆசிரியர்கள் ,யோகா நிபுணர்களின் அளப்பரிய பணியின் மூலம் ஆசிரியர்களுக்கு தேவையான உளவியல் சார்ந்த சிக்கல்களை போக்கும் நிலையில் வகுப்புகள் சிறப்பாக இருந்தது என்றும், பயிற்சி எங்களுக்கு பயன் மிக்க பயிற்சியாக அமைந்தது என்றும் கூறினர். இப்ப பயிற்சியின் மூலம் நாங்கள் உத்வேகம் அளிக்கும் ஆசிரியர்களாக புத்தாக்கம் பெற்றுள்ளோம் என்றனர். பயிற்சியின் நடுவே வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு களப்பயணமாக சென்றது மட்டற்ற மகிழ்ச்சியாக அமைந்தது என்றனர். பங்கு பெற்ற அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடும் ,பயிற்சி சான்றிதழும் வழங்கப்பட்டன. இப்ப பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை தலைவருமான முனைவர் பாஸ்கரன் நன்றி உரையின்போது பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பிலும் ,12 ஆம் வகுப்பிலும் மாநில அளவில் சாதனை செய்ய பயிற்சி தூண்டுகோலாக அமையும் என்றார். இவ்விழாவில் அனைத்து துறைதலைவர்களும்பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவினை இயற்பியல் துறையின் பேராசிரியர் ராசாத்தி தொகுத்து வழங்கினார்.
Next Story





