சாக்கடை கால்வாயில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

காடச்சநல்லூர் கால்வாயில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பகுதி திருச்செங்கோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது  .காடச்சநல்லூர் பேருந்து நிறுத்த பகுதி அருகே அருகே மழைநீர் கால்வாய்களில் கொட்டப்படும் இறந்த கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் நீரில் மூழ்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகள் அடங்கிய மூட்டைகள் தண்ணீரில் மிதந்து செல்ல முடியா வண்ணம் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள நீரில் இறைச்சி கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகிறது.கொசு உற்பத்தி அதிக அளவில் இருப்பதால்  அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கால்வாயின் அருகே பேருந்து நிறுத்தம் இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் வாந்தி, மயக்கத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்..  மேலும் இப்பகுதியில் இயங்கும் உணவகங்கள், பேக்கரிகள்  ,துர்நாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் கடைகளை திறக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சில மர்ம நபர்கள் இரவில் டன் கணக்கில் இப்பகுதியில் கழிவுகளைக் கொட்டி சுகாதார சீர்கேடு தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். உடனடியாக ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்ட தனி ஒரு இடத்தை ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story