பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி தமிழர் நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், ஜன. 26 - அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையம் முன் தமிழர் நீதி கட்சி}ஏர் உழவர் சங்கம் மற்றும் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினர் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மழலையர் கல்வியில் ஆங்கிலத் திணிப்பு கல்வி முறையை கைவிட வேண்டும். மழலையர் கல்வி வகுப்புகளை தாய்மொழி தமிழில் நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 60 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வணிக நிலையங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்கச் செய்திட வேண்டும். ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயக் கல்வி ஆக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழர் நீதி கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் செல்வ.தமிழரசன் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் சுபா.இளவரசன், மாநில மகளிரணித் தலைவி கவியரசி இளவரசன், தமிழ் களம் அரங்கநாடன், தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் அ.சி.சின்னப்பாத் தமிழர் மாநில இலக்கிய அணிச் செயலர் சீனிஅறிவுமழை, தலைமை நிலையச் செயலர் சி.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story

